லக்னோ: அயோத்தியில் 650 கோடி ரூபாய் செலவில் ‘கோவில்கள் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் திட்டத்திற்கு உத்தரப் பிரதேச மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த அனைத்துலக அருங்காட்சியகத்தை அமைக்க சுற்றுலாத் துறை நிலம் வழங்கும் என்றும் 90 ஆண்டுக் குத்தகைக்கான கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் உ.பி. சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
அந்த அருங்காட்சியகம், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்கள், அவற்றின் வரலாறு, கட்டடக்கலையைப் பறைசாற்றும் வகையில் இருக்கும்.
அருங்காட்சியகம் தொடர்பான திட்டம் குறித்து டாடா சன்ஸ் நிறுவனம் முதலில் இந்திய அரசிடம் முன்மொழிந்தது. அதனைத் தொடர்ந்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவில், அமைச்சரவையின் ஒப்புதலோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து முதல்வரும் உயரதிகாரிகளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கிக் கூறியதாகவும் பிரதமருக்கும் இந்த திட்டம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரூ.100 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான டாடா சன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு முன்மொழிவுக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
செயலற்ற நிலையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களைச் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துவதுதான் அத்திட்டம்.
முதற்கட்டமாக, உ.பி. தலைநகர் லக்னோவிலுள்ள கோத்தி ரோஷன் துல்ஹா, மதுராவில் உள்ள பர்சானா ஜல் மஹால், கான்பூரில் உள்ள சுக்லா தலாப் ஆகிய மூன்று பாரம்பரியக் கட்டடங்கள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
லக்னோ, பிரயாக்ராஜ், கபிலவஸ்து ஆகிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் வகையில், அங்கு ஹெலிபேடுகளை அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

