தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானிலை மாற்றம்: டெல்லியில் செயற்கை மழை சோதனை தாமதம்

1 mins read
1ceda7df-0549-40f5-a4e7-bce52d4fa89e
அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: வானிலை மாற்றம் காரணமாக டெல்லியில் செயற்கை மழைப்பொழிவு சோதனை தாமதமாகும் என அம்மாநில அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடமேற்கு டெல்லியின் ஐந்து இடங்களில் அக்டோபர் 7 முதல் 9ஆம் தேதி வரை செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்டார்.

எனினும், அக்டோபர் 7 முதல் 9ஆம் தேதி வரை டெல்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆனால், வறண்ட வானிலை காலத்தில் செயற்கை மழை சோதனை நடத்தினால் மட்டுமே தெளிவான முடிவு கிடைக்கும் என்று குறிப்பிட்ட திரு மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, தற்போதுள்ள சூழலில், செயற்கை மழை சோதனைக்கு வானிலை ஆய்வு மையம் அனுமதிக்காது என்றார்.

வடமேற்கு டெல்லியில் ஐந்து இடங்களில் செயற்கை மழை சோதனை நடத்த, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐஐடி கல்வி நிலையத்துடன் டெல்லி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.

இதற்காக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உட்பட 23 மத்திய அரசின் துறைகளிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செயற்கை மழை உதவும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்