மும்பை: ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட ஒரே நேரத்தில், அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்கிய சம்பவம் மும்பை விமான நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 8) நிகழ்ந்தது.
கடும் பாதுகாப்புக் குறைபாட்டை வெளிப்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியை டிஜிசிஏ பணியிடைநீக்கம் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளியில், ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் காணப்பட்டன. இந்தூரிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம், மும்பையில் தரையிறங்கியது. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டது.
இது குறித்து இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி கூறியதை தனது விமானி பின்பற்றியதாகக் கூறியது.
தனது விமானம் புறப்படுவதற்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி வழங்கியதாக ஏர் இந்தியாவும் கூறியது.
இவ்விரு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது குறித்து கூடுதல் விவரம் பெற அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா சொன்னது.