விகாராபாத் (தெலுங்கானா): ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்குமான இடைவெளியில் சிக்கிய ஆடவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இச்சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், விகாராபாத் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்த காணொளிகள் ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) ஊடகப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) பகிரப்பட்டன.
அவற்றில் ஒரு காணொளியில், வெள்ளைநிறச் சட்டை அணிந்துள்ள ஓர் ஆடவர், புறப்பட்டுவிட்ட ரயிலை நோக்கி ஓடி வந்து ஏற முயல்வது தெரிகிறது. ஆயினும், நிலைதவறி அவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான சிறு இடைவெளியில் சிக்கிக்கொண்டார். இதனால், ரயிலால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனைக் கண்டு விழிப்படைந்த மற்றப் பயணிகள், ரயில்வே காவல்துறையினர், ரயில்வே அதிகாரிகள் ஆகியோரின் விரைந்த செயல்பாட்டால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
நடைமேடையின் சிறுபகுதி உடைக்கப்பட்டு, அந்த ஆடவர் மீட்கப்பட்டதை இன்னொரு காணொளி காட்டுகிறது.
பின்னர் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த ரயில் கர்நாடக மாநிலம் பிடாரிலிருந்து பெங்களூரின் யஷ்வந்த்பூருக்குச் சென்றதாகவும் இச்சம்பவத்தால் ஒன்றரை மணி நேரம் தாமதமானதாகவும் கூறப்பட்டது.

