டெல்லியில் செயற்கையாக மழை பொழிய வைக்க நடவடிக்கை

2 mins read
6236a05c-46c7-4216-ada8-e5858fa64d44
கடும் புகைமூட்டத்துக்கு உள்ளாகியிருக்கும் புதுடெல்லி. - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மோசமான புகைமூட்டத்தைச் சமாளிக்க செயற்கையாக மழை பெய்ய வைக்கும் முறை சோதனையிடப்பட்டுள்ளது.

செயற்கை முறையில் மேகங்களில் மழையைத் தூண்டும் நடவடிக்கை அந்நகரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பெய்ய வைக்கவும் காற்றில் இருக்கும் அபாயகரமான தூசு துகள்களை அகற்றவும் விமானத்திலிருந்து மேகங்களில் வேதிப்பொருள் பீய்ச்சியடிக்கப்பட்டது.

விமானங்களில் இருந்து மேகங்களில் உப்பு அல்லது வேதிப்பொருள்களைப் பீய்ச்சியடித்து மழையைத் தூண்டும் நடவடிக்கை ‘கிளவுட் சீடிங்’ என்றழைக்கப்படுகிறது. புதுடெல்லி நகர அதிகாரிகள், ஐஐடி கான்பூருடன் இணைந்து வியாழக்கிழமை (அக்டோபர் 23) இந்நடவடிக்கையைச் சோதனையிட்டனர்.

நகரின் வடக்குப் பகுதியில் உள்ள புராரி வட்டாரத்தில் செஸ்னா விமானத்தில் ‘கிளவுட் சீடிங்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“விமானத்திலிருந்து மேகங்களில் செயற்கையாக மழை பெய்யச் செய்யும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்நடவடிக்கையில் மேகங்களில் மழையை ஊறச் செய்யும் வேதிப்பொருள் பீய்ச்சியடிக்கப்பட்டது,” என்று டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சர்சா வியாழக்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.

செயற்கையாக மேகங்களில் மழைப்பொழிவை தூண்டச் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி முதல்வர் ரேக்கா குப்தா, “நிலவரம் தொடர்ந்து தோதாக இருந்தால் அக்டோபர் 29ஆம் தேதிக்குள் டெல்லியில் முதன்முறையாக செயற்கையாக தூண்டப்பட்ட மழை பெய்யும்,” என்று தெரிவித்தார். செயற்கையாக மழையை ஊறச் செய்ய என்ன ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

புதுடெல்லியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் 30 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அந்நகரம், தொடர்ந்து காற்று தூய்மைக்கேட்டால் ஆக அதிகம் பாதிக்கப்பட்ட உலக நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் குளிர்காலத்தில் புதுடெல்லி கடும் புகைமூட்டத்துக்கு உள்ளாவது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்