புதுடெல்லி: நையாண்டிப் பிரசாரத்துக்காக இன்ஸ்டகிராமில் தொடங்கப்பட்ட ஒரு கணக்கை ஐந்து நாள்களில் பத்து மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற இக்கணக்கை அபிஜீத் தீப்கே என்பவர் தொடங்கி உள்ளார்.
இதன்மூலம் பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களைவிட சிஜேபியைத் தொடர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் கணக்கை (@bjp4india) தற்போது ஏறக்குறைய 8.7 மில்லியன் பேரும் காங்கிரஸ் கட்சியை 13.2 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். 2012ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை ஏறக்குறைய 1.9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
கடந்த 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது இந்திய இளையர்கள் குறித்து இந்தியத் தலைமை நீதிபதி சில கருத்துகளைக் குறிப்பிட்டார்.
இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு இளையர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
“கரப்பான்பூச்சிகளைப் போல, எந்த வேலையும் கிடைக்காத அல்லது தொழிலில் எந்த இடமும் இல்லாத இளையர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும் சிலர் சமூக ஊடக, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள்,” என்பதே தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து.
அவரது கருத்துகளுக்குப் பதிலளிக்கும் ஒரு நையாண்டி இளைஞர் இயக்கமாக சிஜேபி தொடங்கப்பட்டது என்று அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
“இந்தியத் தலைமை நீதிபதிதான், நமக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கும் அரசியலமைப்பின் பாதுகாவலர். அந்தக் கருத்துகள் அவரிடமிருந்து வந்ததுதான் ஆத்திரமூட்டியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டிய ஒருவர், நமது கருத்துகளை முன்வைத்ததற்காக மட்டுமே நம்மைக் கரப்பான்பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் ஒப்பிடுகிறார். அதுதான் மிகவும் வேதனையளிக்கும் பகுதியாக இருந்தது,” என்று இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அபிஜீத் தீப்கே கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஏராளமான பிரமுகர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் சிஜேபி தற்போது இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
பல்லாண்டுகளாக இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் பெரிய கட்சிகளை வெறும் நையாண்டி, ரீல்கள், மீம்ஸ் ஆகியவற்றைத் தவிர வேறு எந்த ஆயுதமும் இல்லாமல் சிஜேபி முந்திச் சென்றுள்ளது.
இதனிடையே இளைஞர்களைத் தாம் விமர்சித்ததாகக் கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் விளக்கம் அளித்துள்ளார்.

