கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் கைது; மூடப்பட்ட கோட்டையான டெல்லி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் கைது; மூடப்பட்ட கோட்டையான டெல்லி

40,000க்கும் அதிகமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர், போக்குவரத்து முடக்கம், ரயில் சேவைகள் நிறுத்தம்
1 of 3
படம்: ஏஎன்ஐ
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 4:36 pm

2 mins read

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா அமைப்பின் (சிஜேபி) தலைவர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை (அக்டோபர் 10) திட்டமிடப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க மும்பையிலிருந்து வந்த விமானம் புதுடெல்லியில் இறங்கியதும் அவர்கள் விமானத்திலேயே கைதுசெய்யபட்டு, ரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இக்கைது நடவடிக்கைக்குச் சிஜேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி வரும் சூழலில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் தரை உத்தரவு

இந்தியத் தலைநகர் டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
இந்தியத் தலைநகர் டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் - படம்: இபிஏ

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, மத்திய டெல்லி முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஆதரவாளர்கள் பலரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தியும் கைதுசெய்தும் வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 15,000 டெல்லி காவல்துறையினர், 26,000 மத்திய ஆயுதக் காவல் படையினர் உட்பட 40,000க்கும் அதிகமான வீரர்கள் குவிக்கப்பட்டு, நகரம் கோட்டை போல மாற்றப்பட்டுள்ளது.

தடைகளை மீறிப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லும் காவல்துறையினர்.
தடைகளை மீறிப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லும் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லும் பாதைகளில் முள்வேலிகளும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு, செய்தியாளர்கள் உட்பட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஐந்தர் மந்திர் அருகே சனிக்கிழமை (அக்டோபர் 10) போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்கின்றனர்.
ஐந்தர் மந்திர் அருகே சனிக்கிழமை (அக்டோபர் 10) போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்கின்றனர். - படம்: இபிஏ

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 45 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வரவிருந்த விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சில்லறை மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.

“எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் போராட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சிறை செல்லவும் தான் தயாராக இருக்கிறேன்,” என்று மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே கூறினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதற்காகவே ஒட்டுமொத்தத் தலைநகரமும் முடக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தேசியத் தலைநகரில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் போராட்டம், திமுக எம்.பி.க்கள் கைது

இதற்கிடையே, டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னை பெசன்ட் நகரில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்