உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியிடாது: அபிஜீத் தீப்கே

உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியிடாது: அபிஜீத் தீப்கே

கோப்புப் படம்: மில்லியன் போஸ்ட்

25 Nov 2026 - 5:26 pm

2 mins read

புதுடெல்லி: எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி (சிஜேபி) போட்டியிடாது என்றும் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் தனது ஆதரவை அளிக்கப் போவதில்லை என்றும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைவதால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கவும் எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியும் வருகின்றன.

இந்நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே, தேர்தல்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை விளக்கினார்.

உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அதேநேரம், தேர்தல்கள் இளையர்களை மையப்படுத்தி நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சாதி, சமய அரசியலைக் கடந்து, இளையர்களின் எதிர்காலம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிறுத்தித் தேர்தல் அணுகுமுறைகள் மாறவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ள தீப்கே, உத்தரப் பிரதேசத் தேர்தல் களத்தில் தங்கள் கட்சி விலகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இண்டியா கூட்டணியில் சலசலப்பு

இதற்கிடையே, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தமது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கத்தில் 181 தொகுதிகளைக் கோரிய காங்கிரஸ் கட்சி, பின்னர் ஏறக்குறைய 130 தொகுதிகளின் பட்டியலை சமாஜ்வாதியிடம் ஒப்படைத்தது.

இதுதொடர்பான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி இல்லத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரசுக்கு 26 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகைய இழுபறிக்கு இடையே, ஐந்து வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டுள்ளது. அவர்களில் நால்வர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

கடந்த 2017 தேர்தலில் காங்கிரசுக்கு 105 இடங்களை வழங்கியும் ஏழு இடங்களில் மட்டுமே வென்றது. 2022ல் தனித்துப் போட்டியிட்டு 399 இடங்களில் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றதோடு, 387 இடங்களில் வைப்புத்தொகையையும் இழந்தது.

குறிப்புச் சொற்கள்