புதுடெல்லி: ஜெர்மானிய விமானச் சேவை நிறுவனம் லுஃப்தான்சா உடனான விமான எண் பகிர்வு (codeshare) உடன்பாட்டை மேலும் 60 தடங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அந்த 60 தடங்களில் சென்னை உள்ளிட்ட 12 இந்திய நகரங்களும் 26 ஐரோப்பிய நகரங்களும் அடங்கும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமான நிறுவனங்கள் ஒரே விமான எண்ணைப் பயன்படுத்திக்கொள்ள ‘கோட்ஷேர்’ உடன்பாடு வழிவகை செய்கிறது. அதன்படி, ஒரு விமான நிலையத்திலிருந்து கிளம்பி, இன்னோர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வேறோர் இடத்திற்குச் செல்லும் பயணிகள் ஒரே பயணச்சீட்டைக் கொண்டே அவ்விரு விமானங்களிலும் பயணம் செய்யலாம்.
இதனையடுத்து, ஏர் இந்தியா, லுஃப்தான்சா, சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (SWISS) இடையிலான ‘கோட்ஷேர்’ வழித்தடங்களின் எண்ணிக்கை 55லிருந்து கிட்டத்தட்ட 100ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், ஏர் இந்தியா மற்றும் லுஃப்தான்சா குழும விமான நிறுவனங்களால் இந்தியாவிற்கும் ஜெர்மனி அல்லது சுவிட்சர்லாந்திற்கும் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கும் இந்த ‘கோட்ஷேர்’ ஒப்பந்தம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் உடனும் ஏர் இந்தியா புதிய ‘கோட்ஷேர்’ உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளது. அதன்கீழ், அவ்விரு விமான நிறுவனங்களும் 26 தடங்களுக்கு ஒரே எண்ணைப் பகிர்ந்துகொள்ளும்.