சென்னை: செந்தில் பாலாஜி மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுப்பதால் கொங்கு மண்டல விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
9வது வார்டு செயலாளர் மயில்சாமி தலைமையில் ராஜினாமா கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ராஜினாமா கடிதத்தில் ‘பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகளைவிட, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கே தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
‘ஒரு காலத்தில் யாரை எதிர்த்து அரசியல் செய்தோமோ, இப்போது அவர்களுக்குக் கீழ் பணியாற்றுவது மனவருத்தத்தை அளிக்கிறது.
‘மயில்சாமியுடன் இணைந்து கிளைக் கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள், பொறியாளர் அணி நிர்வாகிகள் என 70 பேர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
விளாங்குறிச்சி பகுதி கட்சித் தலைமை, ‘தேர்தல் பணிகளை வேகப்படுத்த வார்டுகள் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளன. அதனால் தனது பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் மயில்சாமி முன்கூட்டியே ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
‘கடிதத்தில் கையெழுத்திட்ட பலருக்கு அதன் பின்னணி தெரியாது என்றும் மயில்சாமி சொன்னதற்காகவே கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.
‘இந்நிலையில் ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்படவில்லை. கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பிவிட்டதாக,’ கட்சித் தலைமை தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரம் கோயம்புத்தூர் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

