சென்னை: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.
சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோவையில் 39 கிலோமீட்டர் தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும் உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அதேபோல, மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கவும் திட்டம் போடப்பட்டது.
27 கிலோமீட்டர் உயர்மட்டப் பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும் 4.65 கிலோமீட்டர் சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி அதற்கு ஆகும் செலவையும் மதிப்பிட்டது.
மதுரையில் ரூ.11,360 கோடியிலும் கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை மாநில அரசு வாயிலாக மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது இரண்டு மில்லியன் (20 லட்சம்) மக்கள்தொகை தேவை என்றும் கோவை மற்றும் மதுரையில் ஒன்றரை மில்லியன் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்றும் அதற்கு மத்திய அரசு சார்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழ்நாட்டில் அமைந்த புதிய அரசாங்கம் கடந்த மே மாதம் மீண்டும் ஒருமுறை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் அவசியத்தை அந்த அறிக்கையில் தமிழக அரசு விளக்கி இருந்தது.
ஆனாலும், மத்திய அரசு அதனை மீண்டும் நிராகரித்துவிட்டது.
மக்கள்தொகை இன்னும் குறைவாகவே இருப்பதாகவும் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனவும் அந்தத் திட்டத்திற்குப் பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

