கொச்சி: தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆள்சேர்ப்பு மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டதாக 2019ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கைத் தேசிய புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இது தொடர்பான விசாரணையில், உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், 27, ஷேக் ஹிதயதுல்லா என்ற பெரோஸ் கான், 35 ஆகியோர், இந்தச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற இருவரும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டதும், பிரசாரம் மேற்கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் என்.ஐ.ஏ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட அசாருதீன் மற்றும் ஹிதயதுல்லா, 2016 முதல் பயங்கரவாதம் தொடர்பான பிரசாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர். அவர்களுடன் மேலும் சிலர் இணைந்து அனைத்துலகப் பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களைச் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிர்ந்து, ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
‘இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுடன் இருவரும் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பயங்கரவாத பிரசாரம் மேற்கொண்டதற்கான, மின்னியல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
‘சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பை ஆதரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அசாருதீன், ஹிதயதுல்லா இருவரும் குற்றவாளிகள்’ என, நீதிபதி அறிவித்தார்.
தண்டனையை அறிவிக்க, இருவரையும் திங்கட்கிழமை நேரில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது, நீதிபதி முன் முன்னிலையான அசாருதீன் மற்றும் ஹிதயதுல்லா இருவரும், குடும்பப் பின்னணியைக் கருத்தில் வைத்துக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.