புதுடெல்லி: மருந்துப் பொருள்களின் தரத்தை நிர்ணயிக்க இந்திய அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ‘கோல்டிரிஃப்’ எனும் இருமல் மருந்தைக் குடித்து 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இருமல் மருந்தைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனமும் தடை விதித்துள்ளது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கவும் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தலைமையில், அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்றது.
இதில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அப்போது மருந்து, அழகு சாதனப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய, ‘மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பான வரைவு அறிக்கை ஒன்றும் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்து தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய மருந்துகளைத் தடை செய்ய வலியுறுத்தி உள்ளன. எனவே, இந்தப் புதிய சட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அடுத்துவரும் நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடரின்போது இந்தப் புதிய சட்டமசோதா அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் தரமற்ற மருந்துப் பொருள்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
மருந்துப் பொருள்களுக்கான தரச்சோதனைகள் கண்காணிப்பும் தீவிரமாகும்.
“உற்பத்தி முதல் சந்தை விநியோகம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நோக்கம்,” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.