ஆட்சியர் அலுவலக முற்றுகை: இடைநிலை ஆசிரியர்கள் கைது

2 mins read
d179d423-105c-4ec0-8941-d5b94db1f4aa
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள். - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஊதிய நிர்ணயத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது.

வெறும் ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த ஊதிய முரண்பாட்டைக் களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்த ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேசமாக முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதனையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, சோர்வு காரணமாகச் சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக அரசு இதுவரை தங்கள் கோரிக்கையை ஏற்காத நிலையில், நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திங்கட்கிழமையும் போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்