பெங்களூரு: கல்லூரி மாணவர் ஒருவரைக் கடத்தி, அவருக்குத் தீ வைத்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் என்ற அம்மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மைசூரைச் சேர்ந்த தமது உறவினர் பெண்ணை ஷஷாங்க் காதலித்தார் என்றும் அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து, அப்பெண் பெங்களூரு சென்ற நிலையில், இம்மாதம் 3ஆம் தேதி ஷஷாங்க் அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இது தெரிந்ததும் இம்மாதம் 10ஆம் தேதியன்று அப்பெண்ணின் பெற்றோரும் உறவினரும் ஷஷாங்கின் வீட்டிற்குள் புகுந்து, அவரை அடித்துப் போட்டுவிட்டு, தங்கள் பெண்ணை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், 15ஆம் தேதி சனிக்கிழமையன்று ஷஷாங்கின் தந்தை ரங்கநாதன் அவரை கல்லூரியில் விட்டுச்சென்றார். கல்லூரி முடிந்தபின் வீடு திரும்ப பேருந்திற்காகக் காத்திருந்த ஷஷாங்கை ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
அக்கும்பல் ஷஷாங்கின் கை கால்களைக் கட்டிப்போட்டு, அவர்மீது எரிபொருளை ஊற்றி, தீ வைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
எப்படியோ தீயை அணைத்த ஷஷாங்க், பிறர் உதவியுடன் தன் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது உடல் முழுவதும் வெந்துபோனதாகக் கூறப்பட்டது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.