யூடியூப் பார்த்து கள்ள நோட்டு தயாரித்த கல்லூரி மாணவர்கள் கைது

யூடியூப் பார்த்து கள்ள நோட்டு தயாரித்த கல்லூரி மாணவர்கள் கைது

படம்: மாலை மலர்

19 Oct 2026 - 7:52 pm

1 mins read

லக்னோ: யூடியூப் காணொளிகளைப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில்விட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அயோத்தியில் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் குபேர் சிங், அர்ஜுன் சிங் ஆகிய இருவரும் இணைந்து கள்ள நோட்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து திட்டமிட்டு வந்துள்ளனர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப முறைகளை அவர்கள் யூடியூப் மூலம் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அர்ஜுன் தனது திட்டத்தை விரிவுபடுத்த கல்லூரி மாணவர்களான ஷஷாங்க் குப்தா (19), ஷாந்தனு சிங் (19), வைபவ் சுக்லா (19) ஆகியோரைத் தன் குழுவில் சேர்த்துக்கொண்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் குப்தா, சுக்லா ஆகியோர் கல்லூரியில் இறுதியாண்டும், ஷாந்தனு இரண்டாம் ஆண்டும் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில் கிரேட்டர் நொய்டா காவல்துறை துணை ஆணையர் ஸ்ரவன் குமார் தலைமையிலான காவல்துறையினர் கொண்ட்லி புஸ்தா பகுதிக்கு அருகே தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.84 லட்சம் மதிப்புள்ள 920 எண்ணிக்கையிலான 200 ரூபாய் கள்ள நோட்டுகள், 1,000 ரூபாய் ரொக்கம், பதிவு எண் இல்லாத கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்