புதுடெல்லி - இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு வலுவான ஆதரவு தெரிவித்து கொலம்பியா அறிக்கை ஒன்றை வெளியிடவிருக்கிறது. இதற்குமுன் மே 7ஆம் தேதி இந்தியா நிகழ்த்திய ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தான்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குக் கொலம்பியா அனுதாபம் தெரிவித்திருந்தது.
அனைத்து கட்சி பேராளர்களுடன் கொலம்பியா சென்ற காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர். “இதற்குமுன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்திய அறிக்கையை அவர்கள் மீட்டுக்கொண்டு எங்கள் நிலைப்பாட்டை வலுவாக ஆதரிக்கும் அறிக்கையை வெளியிடுவார்கள்,” என்றார்.
பேராளர் குழுவின் துல்லியமான விளக்கங்கள் கொலம்பியாவின் எண்ணத்தை மாற்ற உதவியது என்றார் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான திரு தரன்ஜித் சிங் சந்து.
“இன்று காலை தற்காலிக வெளியுறவு அமைச்சரிடம் பேசினோம். எங்கள் தலைவரும் ஒட்டுமொத்த அணியும் எது எப்போது நடந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டோம். கூடிய விரைவில் பாதுகாப்பு மன்றத்தில் உறுப்பு நாடாக இணையவிருப்பதால் கொலம்பியா ஒரு முக்கியமான நாடு,” என்றார் திரு சந்து.
கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யொலன்டா வில்லவிசென்சியோ, “உண்மையான நிலவரம், சர்ச்சை, காஷ்மீரில் என்ன நடந்தது போன்றவை தொடர்பில் விரிவான தகவல்களையும் விளக்கங்களையும் இன்று பெற்றதால் பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.
பயங்கரவாதிகளை அனுப்புவோரையும் தங்களைத் தற்காப்போரையும் ஒருபோதும் சமமாகக் கருதிவிடமுடியாது என்றும் திரு தாருர் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் மாண்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுதான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரத்தைப் புதுடெல்லி கொண்டிருப்பதாக திருவனந்தபுர நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
“எங்களைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையைத் தான் நாங்கள் முன்னிறுத்துகிறோம். கொலம்பியா எவ்வாறு பல பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டதோ அதே போலதான் இந்தியாவும் எதிர்கொண்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பெரிய அளவிலான தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறோம்,” என்றார் அவர்.