முதலீடு செய்ய வாரீர்: சிங்கப்பூர் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு அழைப்பு

முதலீடு செய்ய வாரீர்: சிங்கப்பூர் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு அழைப்பு

2 mins read
97b0c7a4-81c3-4e4c-b9ad-51e99ddb2b35
சிங்கப்பூருக்கு வருகை புரிந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு (இடது) பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். - படம்: நாரா சந்திரபாபு நாயுடு/ ஃபேஸ்புக்

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்வதற்குரிய வாய்ப்புகள் குறித்து உலகளாவிய பகுதி மின்கடத்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் முதலீட்டுக்கான ஆகச்சிறந்த மாநிலங்களில் ஆந்திரா முக்கியமானது என சிங்கப்பூரில் நடைபெற்ற செமிகான் சுற்றுச்சூழல் வட்டமேசை மாநாட்டில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.

முதலீடுகள், தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்கும் நோக்கத்துடன் வணிகம் செய்யும் வேகம் என்ற அணுகுமுறையை ஆந்திர அரசு கடைப்பிடிப்பதாக திரு நாயுடு கூறினார்.

“ஆந்திராவில் உள்ள நல்வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் ஆராய்வதற்கு இதுவே உகந்த தருணம். அடுத்த 30 நாள்களுக்குள் ஆந்திராவுக்கு வருகைதந்து, அங்குள்ள வாய்ப்புகள், எங்களுடைய கொள்கைகளை மதிப்பீடு செய்யுங்கள்,” என்று திரு சந்திரபாபு நாயுடு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்ததாக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முதலீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகத் திகழும் வேளையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகள், விரைவான ஒப்புதல்கள் மூலம் ஆந்திரப் பிரதேசம் தொழில்களுக்கு உகந்த சூழலை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பகுதி மின்கடத்தி உற்பத்தியில் ஆந்திரா தனித்திறனுடன் விளங்குவதாகவும் விரைவில் ராயலசீமா பகுதியில், பகுதி மின்கடத்தி உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளதாகவும் திரு நாயுடு தெரிவித்தார்.

தற்காப்பு, விண்வெளி, போர் விமான உற்பத்தி, வாகன உற்பத்தி ஆகிய துறைகளிலும் ராயலசீமா குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வட்டமேசை மாநாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் பகுதி மின்கடத்திச் சூழலமைப்பை வலுப்படுத்துவது, ஆந்திராவில் உற்பத்தி, அதுசார்ந்த துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆந்திராசந்திரபாபு நாயுடுமாநாடுமுதலீடுஉற்பத்திவிண்வெளி வீரர்