வாங்க வாக்களிக்கலாம்: பட்டுப் பாவாடை அணிந்து சாக்லேட் கொடுத்த ‘ரோபோ’ பெண்

வாங்க வாக்களிக்கலாம்: பட்டுப் பாவாடை அணிந்து சாக்லேட் கொடுத்த ‘ரோபோ’ பெண்

1 mins read
aed791e3-e59c-4f76-94a2-da2deb2c707b
கையில் ஒரு தாம்பூலத் தட்டில் ரோஜாப் பூக்கள், சாக்லேட்டுகளை ஏந்தி, வாக்குச்சாவடிக்குள் நுழையும் வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கிய ரோபோ. - படம்: தினமலர்
Google News Preferred Icon

கோயம்புத்தூர்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தொழில்நுட்பமும், கலாசாரமும் கைகோத்த ஒரு சுவாரசியமான சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதலே அரசியல் தலைவர்கள்முதல் சாமானிய மக்கள்வரை 5.73 கோடி வாக்காளர்களும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

கோவையின் சிறப்பு வரவேற்பு

ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு புதுமை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், கோவை அரசுக் கலைக் கல்லூரி வாக்குச்சாவடியில் ஒரு விநோதமான வரவேற்பு வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

வாக்காளர்களை வரவேற்க ‘டினா’ என்ற ரோபோ பணியமர்த்தப்பட்டிருந்தது.

பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு பெண்ணைப் போலவே வடிவமைக்கப்பட்ட அந்த ரோபோ, பாரம்பரிய முறைப்படி பட்டுப் பாவாடை அணிந்து காட்சியளித்தது.

கையில் ஒரு தாம்பூலத் தட்டில் ரோஜாப் பூக்கள், சாக்லேட்டுகளை ஏந்தி நின்ற அந்த ரோபோ, வாக்குச்சாவடிக்குள் நுழைந்த வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு சாக்லேட், பூக்களை வழங்கியது.

வெப்பத்தையும் நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்த மக்களுக்கு, அந்த ரோபோவின் இனிய வரவேற்பு பெரிதும் மகிழ்ச்சியை அளித்தது.

குறிப்பாக, முதன்முறை வாக்களிக்க வந்த இளையர்களும் பெரியவர்களுடன் வந்திருந்த குழந்தைகளும் அந்த ‘ரோபோ’ பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை உற்சாகப்படுத்திய அம்முயற்சி பற்றி சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்