புதுடெல்லி: இந்தியாவின் 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் விநியோகம் தொடங்கியது.
இதையடுத்து, எரிவாயுக் கலன்களைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு எச்சரித்துள்ளது.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள கடும் மோதல் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் ஏராளமான உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
குறிப்பாக, எரிபொருள் விநியோகம் பல நாடுகளுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதன் நீட்சியாக சமையல் எரிவாயுக் கலன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வணிக எரிவாயுக் கலன் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் பல உணவகங்கள் மூடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மக்கள் பெட்ரோல், டீசலை அதிக அளவில் வாங்கத் தொடங்கினர்.
கவலை வேண்டாம்:
இந்நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, வீடுகளுக்கான சமையல் எரிவாயுக் கலன்கள் தேவைக்கு ஏற்ப கையிருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் பீதியடைந்து தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் எரிவாயுக் கலன்களுக்கு முன்பதிவு செய்வதால்தான் பிரச்சினை எழுகிறது என்றும் இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
உள்நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
பீதியே காரணம்:
மேலும், தட்டுப்பாடு நிலவுவது போன்ற தோற்றம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கினார்.
இந்தியாவில் சமையல் எரிவாயுக் கலன்களுக்கான அன்றாட முன்பதிவு 55 லட்சம் ஆகும். அவற்றுள் குறைந்தபட்சம் 50 லட்சம் கலன்கள் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில், அன்றாட முன்பதிவானது வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) ஏறக்குறைய 75 லட்சமாகவும் சனிக்கிழமை (மாா்ச் 14) 88 லட்சமாகவும் உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது பீதியால் ஏற்பட்ட விளைவு என்றார் அவர்.
இதனால்தான், இரு முன்பதிவுகளுக்கு இடையேயான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 25 நாள்களாகவும் ஊரகப் பகுதிகளில் 45 நாள்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.
கைது நடவடிக்கை:
இதனிடையே, வணிக எரிவாயுக் கலன் விநியோகத்தில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் தொடங்கிவிட்டது என்றார் சுஜாதா சர்மா.
எரிவாயுக் கலன் விநியோகத்தை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இது தொடர்பாக முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, எரிவாயுக் கலன்கள் பதுக்கல், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது ஆகிய குற்றங்களுக்காக தமிழகத்தில் இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதாகினர்.
உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் 20 வழக்குகளைப் பதிவு செய்து 19 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

