கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசிக் கோட்டையும் தகர்ந்தது

கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசிக் கோட்டையும் தகர்ந்தது

2 mins read
3c377e23-4c01-4425-a6f5-2436862fa93d
கேரளாவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இழந்த ஆட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

திருவனந்தபுரம்: கேரளம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றுவதைத் தொடர்ந்து இந்தியாவில் எஞ்சியிருந்த ஒரே ஒரு கம்யூனிஸ்ட் கோட்டையும் தகர்ந்துவிட்டது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்), எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி என்னும் மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது.

முற்பகல் 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 71 தொகுதிகளையும் தாண்டி 100 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி பின்னடைவைச் சந்தித்தன.

இதில் காங்கிரஸ் மட்டும் 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 28 இடங்களில் முன்னிலை வகித்தது.

கேரளம் மாநிலத்தில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றுள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் 95 தொகுதிகளில் களமிறங்கியது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகுதிகளில் போட்​டி​யிட்ட நிலையில், இதர தொகு​தி​கள் கூட்டணிக் கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்டன.

இடது ஜனநாயக முன்ன​ணி சார்பில் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களிலும் மீதமுள்ள இடங்களில் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 115 தொகு​தி​களில் போட்டியிட்டது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி 43 மையங்களில் எண்ணப்பட்டன.

கேரளம் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி (எல்டிஎஃப்) ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் செயல்பட்டு வந்தார். ஐந்தாண்டு ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்து இரண்டாவது முறை முதல்வர் ஆன கம்யூனிஸ்ட் தலைவர் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்தியாவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி 1977லிருந்து தொடர்ந்து வந்தது. 1977 முதல் 2011 வரை 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த அக்கட்சி அதன் பின்னர் சரிவைச் சந்தித்தது. அந்த மாநிலத்தில் அதன் 34 ஆண்டு கால ஆட்சி 2011ல் முடிவுக்கு வந்தது. தற்போது ஓரிலக்க வெற்றியையே அக்கட்சி பெற்று வருகிறது.

திரிபுராவில் 25 ஆண்டு காலமாக ஆட்சிபுரிந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018ல் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு அந்தக் கட்சி மீண்டெழவில்லை.

எஞ்சியிருந்த கேரளமும் தற்போது அந்தக் கட்சியின் பிடியிலிருந்து விலகிவிட்டது. இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி எந்த மாநிலத்திலும் இல்லை என்னும் புதிய வரலாறு இந்தத் தேர்தலில் உருவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்