திருவள்ளூர்: சென்னை அருகே அமோனியா வாயுக் கசிவால் 18 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான கன்னிகைப்பேர் கடலுணவு ஏற்றுமதி நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் உள்ளிட்ட கடலுணவுப் பொருள்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்த தனியார் நிறுவனத்தில் ஜூன் 21ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
அந்த விபத்தில் 83 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெண் ஊழியர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்து நடந்த தனியார் நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 டன் இறால் உள்ளிட்ட கடல் உணவுகள் வெவ்வேறு இடங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அந்த நிறுவன வளாகத்திலிருந்து அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வரை நீடித்த அந்தப் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம், ஊழியர்கள் தங்குமிடம், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் கூடம், அமோனியா வாயு சேமிப்புத் தொட்டிகள் அடங்கிய வளாகம் ஆகியவற்றுக்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் முன்னிலையில் புதன்கிழமை (ஜூலை 8) அந்தப் பணி நடைபெற்றது.

