பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயிலின் நிர்வாகிகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்ததாக, ஒருவர் புகார் அளித்தார். இப்போது அவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர் அந்தக் கோயிலில் பணிபுரிந்த துப்புரவுப் பணியாளர் என்று தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்களின் சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாகவும் முன்னாள் துப்புரவுப் பணியாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கர்நாடகாவில் மட்டுமல்ல இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கர்நாடக அரசு இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. இந்தக் குழுவைச் சேர்ந்த காவல்துறையினர் நேத்ராவதி ஆற்றங்கரையில் 13 இடங்களில் தோண்டி, சோதனை நடத்தினர். அதில் 3 இடங்களில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் மண்டை ஓடு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அந்தக் கோயிலின் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே, “தர்மஸ்தலா கோயிலின் மாண்பைக் கெடுக்கும் வகையில் துப்புரவுப் பணியாளர் பொய் புகார் அளித்துள்ளார்,” என குற்றம்சாட்டினார்.
கர்நாடக பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, “இதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இருக்கிறார்,” என குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறப்பு விசாரணைக் குழு காவல்துறையில் புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தவறான தகவல்களை கூறி, காவல்துறையை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது காவல்துறை நேற்று வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மற்றொரு புகார்தாரரும் பின்வாங்கல்
இந்த விவகாரத்தில் மற்றொரு புகார்தாரரான சுஜாதா பட் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “தர்மஸ்தலாவில் என் மகள் அனன்யா பட் கொல்லப்பட்டதாக புகார் கூறினேன். அவர் எனது மகள் அல்ல. என் நண்பரின் மகள். நான் பொய் புகார் அளித்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என கூறியுள்ளார். இந்நிலையில் தர்மஸ்தலா பாலியல் கொலை விவகாரத்தில் புகார் அளித்தவர் மீதே நடவடிக்கை எடுத்திருப்பதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.