இந்தூர்: இந்தூரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்ற போக்குவரத்துக் காவலர் இந்தியா முழுவதும் ‘டான்சிங் காப்’ (Dancing Cop) என்று கொண்டாடப்படுபவர்.
இவர் தற்போது தலைமைக் காவலர் என்ற பதவியில் இருந்து காவலர் என்ற நிலைக்குப் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக என்டிடிவி ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது துறைரீதியான இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சிங் மீது அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், அவர் தன்னுடன் அநாகரீகமாக உரையாடியதாகவும் இந்தூரில் வந்து சந்திக்குமாறு அவர் தன்னை அழைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஞ்சித் சிங் இந்தியாவில் மட்டுமின்றி அனைத்துலகிலும் பிரபலமாக அறியப்படுபவர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதை ஒரு நடனக்கலைபோல் செய்து வந்தார்.
இந்தூரின் பரபரப்பான சாலை சந்திப்புகளில், பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பாணியில் ‘மூன்வாக்’ ஆடிக்கொண்டே போக்குவரத்தைச் சீர்செய்வார்.
அவரது நடை, தாளம்போடும் கை சமிக்ஞைகள், துடிப்பான நடனத்தைக் காண்பதற்காகவே மக்கள் அந்தப் பகுதியில் கூடுவார்கள்.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் லட்சக்கணக்கானோர் இவரைப் பின்தொடர்கின்றனர். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
25 ஆண்டுகாலப் பணியில் 150க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூரில் போக்குவரத்து மேலாண்மைக்காகப் பலமுறை பாராட்டப்பட்ட ஒரு அதிகாரி, இப்போது இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது சமூக வலைத்தளங்களிலும் காவல்துறையைச் சேர்ந்தோரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் பற்றிய விசாரணை தொடர்கிறது.

