இணைய வழி உணவுப் பொருள்கள் விற்கும் நிறுவனங்கள் அலட்சியப் போக்கு குறித்துப் புகார்

இணைய வழி உணவுப் பொருள்கள் விற்கும் நிறுவனங்கள் அலட்சியப் போக்கு குறித்துப் புகார்

2 mins read
bafcd063-26ca-4281-b625-80a9672e9e42
எலி துள்ளித் திரியும் காட்சியை தங்கள் கைப்பேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் சில இளைஞர்கள் பதிவு செய்தனர். - படம்: எக்ஸ்.காம்/ என்டிடிவி
Google News Preferred Icon

மும்பை: மகாராஷ்டிராவில் இணைய வழி உணவுப் பொருள்கள் விற்கும் நிறுவனங்கள் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் வழங்கிய உணவுப் பொருள்களில் கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து வாடிக்கையாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள இத்தகைய தனியார் நிறுவனம் ஒன்றில், விநியோகத்திற்காகப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் எலிகள் ஓடித் திரிவதாக ஆதாரங்களுடன் ஒரு காணொளி வெளி வந்துள்ளது.

மும்பையின் கோத்ரேஜ் ஹில் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சில இளையர்கள் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு உணவுப் பொருள்களை உறைந்த நிலையில் வைத்திருக்க உதவும் பெரிய ‘பிரீசர்’ ஒன்றில் எலி ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து எலி துள்ளித் திரியும் காட்சியைத் தங்கள் கைப்பேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் அந்த இளைஞர்கள் பதிவு செய்தனர்.

இதனால் கொந்தளித்துப் போன இணையவாசிகள் உணவு, பாதுகாப்புத் துறைக்கு தொடர் கோரிக்கைகளை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மைக்காலமாக விரைவு வர்த்தகத் (Quick-Commerce) தளங்களின் சேமிப்பு மையங்களில் மகாராஷ்டிர உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, சுகாதார விதிமீறல்கள், பராமரிப்புக் குறைபாடுகள் காரணமாக சில நிறுவனங்களுக்குச் சொந்தமான 14 கடைகளின் உரிமங்களை மகாராஷ்டிர உணவுப் பாதுகாப்புத்துறை தற்காலிகமாக ரத்து செய்தது.

மும்பை கட்கோபரில் உள்ள இத்தகைய மையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரப்பான்பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்ததும், முறையற்ற கழிவுநீர் மேலாண்மை, தட்பவெப்பநிலை பராமரிப்பு இன்மையும் கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்