புதுடெல்லி: தீபாவளிக்கு முன்னதாக காற்று மாசு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசுகளுக்கு முழுமையாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு நேற்று இந்தக் கட்டுப்பாட்டு அறிவிப்பை வெளியிட்டது. இனி டெல்லியில் பட்டாசு தயாரிப்பதோ, வெடிபொருள்களைச் சேமித்து வைப்பதோ மற்றும் கடைகளிலோ இணையத்தில் விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். இது கம்பி மத்தாப்பு சிறிய வகை பட்டாசுகளுக்கும் பொருந்தும். எனவே, இந்த ஆண்டும் தீபாவளி டெல்லியில் அமைதியான முறையில் கொண்டாடப்படும்.
ஆண்டுதோறும் குளிர்காலங்களில் அதிகரிக்கும் மாசைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்தக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதையடுத்து டெல்லி முழுதும் காவல்துறையினர் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டெல்லியில் பட்டாசு புழக்க நிலவரங்கள் குறித்து அவர்கள் நாள்தோறும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில், டெல்லியில் மாசு அதிகரிப்பதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தசரா பண்டிகைக்கு மறுநாள் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது. அடுத்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காற்றின் தரம் மேலும் மோசமடையக் கூடும் என்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
செயற்கை மழை அவசியம்
அண்மையில் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், உச்சக்கட்ட காற்று மாசு காலங்களில் செயற்கை மழையைப் பயன்படுத்துவது குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தார்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் நவம்பர் மாதத் தொடக்கத்தில் காற்றின் தரம் அதிகபட்சம் மோசமடைய வாய்ப்புள்ளது. செயற்கை மழையைப் பொழியவைத்துக் காற்றின் மாசைக் கடந்த மாதமே குறைத்திருக்க வேண்டும். எனவே, மேலும் செயற்கை மழைப் பொழிவு ஏற்படுத்துவதைத் தாமதிக்கவேண்டாம் என்று அமைச்சர் கோபால் ராய் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை மழைப் பொழிவால் டெல்லி எதிர்நோக்கி வரும் மாசுக்கட்டுப்பாட்டை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரலாம். இது தொடர்பாகக் கான்பூர் ஐஐடி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆய்வுசெய்து ஒரு விளக்கக் காணொளியைத் தயாரித்துள்ளனர். அந்த விளக்கக் காணொளிக் காட்சி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராய்.

