ஸ்ரீநகர்: கடந்த 37 ஆண்டுகளில் முதல்முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளூர் பயங்கரவாதிகள் அறவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரத் தொடக்கத்தில் கடைசி உள்ளூர் பயங்கரவாதியான லத்தீஃப் பட் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளின் நடமாட்டம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துள்ளது.
அங்கு ஓர் உள்ளூர் இளையர்கூட பயங்கரவாத அமைப்புகளில் இணையவில்லை என்றும் கடந்த 2018ஆம் ஆண்டில் 196 உள்ளூர் இளையர்கள் பயங்கரவாதக் குழுக்களில் இணைந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, நடப்பு ஆண்டில் பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது என்றும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஆட்சேர்ப்பு சரிந்துவிட்டதால், மலைப்பாதைகள் பனியால் மூடப்படுவதற்கு முன்பே குளிர்கால ஊடுருவலுக்குப் பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.
பீர் பாஞ்சால் மலைத்தொடருக்கு வடக்கே ஏறக்குறைய 35 பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கணிக்கப்பட்டு, பாதுகாப்புப் படைகளால் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள ஏவுதளங்களைப் பயங்கரவாதிகள் மீண்டும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இம்முறை பெரிய குழுக்களுக்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழுக்களை அமைக்க லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளிர்காலத்தில் காடுகள், குகைகளில் பயங்கரவாதிகள் பதுங்குவதைத் தடுக்க, மலைப்பகுதிகள், வனப்பகுதிகளில் ஏறக்குறைய 100 தற்காலிக செயல்பாட்டுத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
