புதுடெல்லி: இந்தியாவின் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதில் பாதுகாப்புப் படையினருக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஜம்மு, காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதம் இல்லாத காஷ்மீர் என்ற இலக்கை அடைவதே பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்றார்.
அந்த இலக்கை அடைவதற்குத் தடையாகவும், அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முற்படும் எந்தவொரு முயற்சியையும் நசுக்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முழு சுதந்திரத்தையும் அனுபவிப்பார்கள் என்று அமித்ஷா உறுதிபடத் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், காஷ்மீரில் எதிரிகளால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளே காரணம் என்றார் அவர்.
அத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள தேவைப்படும் அனைத்து வளங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் திரு அமித்ஷா உறுதியளித்தார்.
வட்டார அமைதி, பாதுகாப்பு மிக முக்கியம் என்று வலியுறுத்திய அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றார்.
“இத்தகைய நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலையை வலுப்படுத்த உதவின. அவ்வட்டாரத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பயங்கரவாதிகள் பனிப்பொழிவைப் பயன்படுத்தி எல்லையைத் தாண்டி ஊடுருவாமல் இருப்பதை உறுதிசெய்ய பாதுகாப்புப் படையினர் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்.
“பயங்கரவாதத்திற்கு முழுமையான முடிவு என்பது பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது,” என்றார் அமைச்சர் அமித்ஷா.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வுப் பணியக இயக்குநர், ராணுவத் தலைவர், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.