புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் 2026 ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் ரொக்கப் பரிவர்த்தனையை நீக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்பிறகு வாகன ஓட்டுநர்கள் ஃபாஸ்ட்டேக் அல்லது யுபிஐ மூலமாக மட்டுமே சுங்கக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.
இது நெடுஞ்சாலைகளை முழுக்கவும் மின்னிலக்கமயமாக்கும் திட்டத்தின் முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரத்துவ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அந்நடைமுறையைச் சீராக அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துவருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி நீண்ட வரிசையில் நிற்கத் தேவையிராது என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மேலும், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக ஓட்டுநர்கள் பணத்தை எடுத்துக்கொடுக்கவும் மீதிச் சில்லறைக்காவும் காத்திருக்கத் தேவையிராது.
அத்துடன், மின்னிலக்கப் பரிவர்த்தனையால் ஒவ்வொரு முறையும் எவ்வளவு கட்டணம் செலுத்தினோம் என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். இந்தியச் சுங்கக் கட்டண வசூலிப்பு முறையை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியே இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னிலக்கக் கட்டணத் தெரிவுகள் இல்லாத வாகனங்கள் தாமதங்களை எதிர்நோக்கலாம் அல்லது அபராதம் செலுத்த நேரிடலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு வாகனத்தை நிறுத்தத் தேவையில்லாத வகையில் ‘பல்தட தடையற்ற ஓட்டம்’ எனும் மாதிரி தொடர்பிலும் அரசாங்கம் பணியாற்றி வருகிறது. அத்திட்டத்தைச் செயல்திறன்மிக்க முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
தற்போது, நாடு முழுவதும் 25 சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் முறை சோதித்துப் பார்க்கப்படுகிறது. அது வெற்றிகரமாக அமைந்துவிட்டால், எதிர்காலத்தில் நாட்டிலுள்ள மற்றச் சுங்கச்சாவடிகளிலும் அது நடைமுறைப்படுத்தப்படலாம்.

