புதுடெல்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிப்பதாக ‘பிரிக்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரிக்ஸ் நாடுகளின் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய வர்த்தகம், பொருளியல், உலக அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை கடைப்பிடிப்பது தொடர்பாகவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒப்புக்கொண்டதாக பிரிக்ஸ் அமைப்பு மேலும் கூறியுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில், தற்போது தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனீசியா, ஈரான், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பிரேசிலில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ அமைப்பு நாடுகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது.
இக்கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அனைத்துலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகக் கருதப்படுகிறது.