இலவசத் திருமண விழாவில் வழங்கப்பட்ட பரிசுப்பொருளால் சர்ச்சை!

1 mins read
89c11cb1-34a8-4a43-9a31-2e3338848b01
திருமண விழாவில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் வழங்கியதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி சாடியுள்ளது. மாதிரிப்படம் -

அரசாங்கம் நடத்திய இலவசத் திருமண விழாவின்போது மணப்பெண்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒப்பனைப் பெட்டியில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான், கன்னியருக்கான இலவசத் திருமணத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறார். அதன்கீழ், அண்மையில் ஜாபுவா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 300 இணையருக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அவ்விழாவில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பனைப் பெட்டியில் தேசிய சுகாதார இயக்கத்தின் வில்லைகள் ஒட்டப்பட்ட ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் இருந்தன.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவை தரப்பட்டதாக புர்சிங் ராவத் என்ற உயரதிகாரி தெரிவித்தார்.

"ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் வழங்கப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. முதல்வரின் 'கன்னியர் திருமணத் திட்டத்தின்கீழ்' அப்படி வழங்க எந்த ஏற்பாடும் இல்லை. எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் ஆணுறைகளைப் பொது நிகழ்ச்சிகளில் வழங்காமல் வீடு வீடாகச் சென்று தருமாறும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்," என்று ராவத் கூறியதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஒப்பனைப் பெட்டியில் ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் வைத்துத் தந்ததற்கு அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.