புதுடெல்லி: பெண் பயணியின் பயணப் பெட்டிக்குள் இருந்த திருப்புளியில் (screwdriver) மறைத்து வைத்து எடுத்துவரப்பட்ட 257 கிராம் தங்கத்தை டெல்லி அனைத்துலக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து பயணம் செய்த 20 வயது ஆண் பயணி ஒருவரைக் கண்காணித்து வருவதாகச் சுங்கத்துறை புதன்கிழமை (ஜனவரி 15) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
“ரியாத் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த அந்த ஆடவர், அதே விமானத்தில் வந்த சக்கர நாற்காலிப் பெண் பயணி ஒருவரை அழைத்து வந்தார். அவர்களின் பயண உடைமைகளை ஊடுகதிர்ப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் பயணியின் பெட்டியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஏதோ இருந்தது கண்டறியப்பட்டது,” என்று எக்ஸ் சமூக ஊடகப் பதிவு வழியாகச் சுங்கத்துறை விளக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்பெட்டியைத் திறந்து சோதனை செய்தபோது, திருப்புளியில் 257 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.18.62 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.