புறவழிச்சாலைக்குப் பெயரிடுவதில் மோதல்; ஆந்திராவில் 144 தடை உத்தரவு

புறவழிச்சாலைக்குப் பெயரிடுவதில் மோதல்; ஆந்திராவில் 144 தடை உத்தரவு

1 mins read
d8265a85-c503-4c64-931d-f845b566ba56
வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி. - படம்: தினமணி

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் ஆல்மாஸ்பெட் சாலைச் சந்திப்பில் உள்ள புறவழிச்சாலைக்குப் பெயரிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு நிலவிவந்தது.

அம்மோதல் வன்முறையாக மாறியதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அம்மாநிலக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 10) தெரிவித்தது.

அச்சாலைக்கு மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் பெயரை வைக்கவேண்டும் என ஒரு தரப்பினரும் கடவுள் அனுமனின் பெயரை வைக்கவேண்டும் என மற்றொரு தரப்பினரும் கூறிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கடப்பா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் செருகுரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷெல்கே நசிகேத் விஸ்வநாத்தும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, “ஆல்மாஸ்பெட் சந்திப்பில் உள்ள சாலைக்குப் பெயரிடுவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தி சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க சிலர் முயற்சி செய்தனர். எனவே, சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,” என அவர்கள் கூறினர்.

மேலும், வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் தொடர்பில் சிலர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் போலி தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

பதற்றம் நிலவும் பகுதியில் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்த அம்மாநிலக் காவல்துறை தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்