கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (பிப்ரவரி 5) செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்த மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமதி மிர், அனைத்துத் தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது காங்கிரஸ்.
எனினும், தேர்தலில் படுதோல்வி கண்ட காங்கிரஸ், ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள அகமதி மிர், கடந்த முறை காங்கிரஸ் அமைத்த கூட்டணி அடிமட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்துவிட்டது என்றார்.
எனவே, இந்த முறை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 இடங்களில் தனித்துப் போட்டியிடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்றார்.
முன்னதாக, டெல்லியில் மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் கே.பி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது மேலும் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இம்முறை மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

