அரசியலமைப்பை அவமதித்ததாக பாஜக எம்.பி. மீது காங்கிரஸ் புகார்

1 mins read
f00a1bff-129e-40cd-8577-a99b5593f6b1
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ரா. - கோப்புப் படம்: தி இந்து / இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) ஹிபி ஈடன், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ராவுக்கு எதிராக அரசியலமைப்பை அவமதித்ததாக அதிகாரபூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவரான திரு ராகுல் காந்தி ஆக மோசமான தேசத் துரோகிகளில் ஒருவர் என்று திரு பத்ரா கடுமையாக விமர்சித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திரு ஈடன், திரு பத்ரா மீதான புகார் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உபயோகிக்கக்கூடாத ஒருவரை இழிவுபடுத்தும் வார்த்தைககளைப் பயன்படுத்தியதன் மூலம் அரசியலமைப்பு வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டதுடன் திரு பத்ரா அரசியலமைப்பை அவமதிக்கவும் செய்துள்ளார் என திரு ஈடன், நாடாளுமன்ற நாயகருக்குச் சமர்ப்பித்த தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திரு பத்ரா, திரு ராகுல் மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் திரு ஈடன் கூறினார். கட்சித் தலைவருக்கு எதிராக உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் இழிவுபடுத்தும் வார்த்தைகள் என்றும் பொது வாழ்க்கையில் அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் திரு ஈடன் சொன்னார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரு ராகுலை ‘தேசத்துக்கு எதிரானவர்’ என்று வகைப்படுத்தியதை காங்கிரஸ் சாடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்