டெல்லி: விவசாயிகளுக்கு உதவுவது போல் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகளுக்கு காங்கிரஸ் வலுவான ஆதரவு அளித்ததால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு ஏற்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பங்கும் இல்லை.
“இதையடுத்து அந்த சட்டங்களுக்கான அறிக்கையை முதல் அரசாக கெஜ்ரிவால் அரசு கடந்த 2020 நவம்பரில் வெளியிட்டது. விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து பாஜகவுக்கு தங்களின் அடிமைத்தனத்தை காட்டுவதற்காக கெஜ்ரிவால் அரசு இதனைச் செய்தது.
“தற்போது வேளாண் சட்டங்களைப் பாஜக மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறுகிறார். போராடும் விவசாயிகளுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பாஜகவே பொறுப்பு என்று நாடகமாடுகிறார்.
“எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு மலிவான அரசியல் லாபம் பெறுவதற்காக ஆம் ஆத்மி இவ்வாறு செய்கிறது,” என்று தேவேந்திர யாதவ் சாடினார்.
விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிவந்த கெஜ்ரிவால், வேளாண் சட்டங்களுக்கான அறிக்கையை வெளியிட்டபோது அவரது இரட்டை நிலைப்பாடு மற்றும் விவசாயிகள் விரோதப்போக்கு அம்பலமானதாக அவர் குறிப்பிட்டார்.

