சண்டிகர்: சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் கட்சி உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவித்து வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அரசாங்கப் பதவிகள்மீது குறிவைக்கும் எதிரணிகள் பல குழுக்களாகப் பிரிந்துள்ளனர். அதனால், காங்கிரஸ் கட்சி, அமைப்பு ரீதியாக முடிவெடுப்பதில் தாமதங்களும் இழுபறிகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதே நிலை நீண்டகாலத்திற்கு நீடித்தால் கட்சிக்குப் பேரிழப்பு ஏற்படும் சாத்தியம் இருபபதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர்களிடையே உள்ள உட்கட்சிப் பூசல்களைத் தீர்ப்பதில் அக்கட்சியின் தலைமை தோல்வியடைந்துள்ளது.
கடந்த 12 நாள்களில் நான்கு முறை பஞ்சாப் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துப் பேசப்பட்டுள்ளனர்.
மாநிலக் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங், எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றனர்.
அடுத்தகட்ட முயற்சியாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற காங்கிரஸ் தலைமை முயன்று வருகிறது.
பஞ்சாப்பின் அரசியல் சூழலை மறுஆய்வு செய்வதிலும் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் காங்கிரஸ், மாநிலத்தின் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்த முதற்கட்ட கலந்துரையாடல்களைத் தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வுசெய்ய கட்சி முயன்று வருவதாக பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார்.
அதேநேரம் இதர கட்சிகள் பிரசார உத்திக்கு மாறி வருகின்றன. சிரோன்மணி அகாலி தளம், மாநிலம் தழுவிய அளவில் கட்சியினரை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் சாலைக்காட்சி நடத்த அக்கட்சி ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

