தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்னாவில் கூடும் காங்கிரஸ் தலைவர்கள்: பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை

1 mins read
bb559925-6d31-44c7-9146-f61fe59ad74a
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

அந்த மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், பீகார் தேர்தல்குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி நடக்கவுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் தான் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் மாநில முதலமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூட்டணியில் நிலவும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகள் திருடப்படுவதாகத் தேர்தல் ஆணையம், பா.ஜ.க. புகாருக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

வாக்கு திருட்டு பிரச்சினையைத் தீவிரப்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்