பெங்களூரு: தொழிலதிபரை மிரட்டி ரூ.2.77 கோடி பறித்ததாகக் கர்நாடக இளையர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரையும் அவரது கூட்டாளியையும் மங்களூரு காவல்துறை கைது செய்தது.
மங்களூரு இளையர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிஜாம், அவரது கூட்டாளி ஜிதேஷ் ஆகிய இருவரும் 2024ஆம் ஆண்டு முதல் அந்தத் தொழிலதிபரை மிரட்டி வந்துள்ளனர்.
அவரது ஆபாசப் புகைப்படங்களையும் காணொளிகளையும் பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழிலதிபரின் மனைவியிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டப்போவதாக மிரட்டி, முதலில் ஜிதேஷ் 35 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், பணம் கொடுத்த பின்னர் அத்தொழிலதிபர் நிஜாமிடம் உதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நிஜாம் அவருக்கு உதவவில்லை. மாறாக, ஜிதேஷுடன் சேர்ந்துவிட்டார்.
இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிதேஷ் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அதற்குத் தொழிலதிபர்தான் காரணம் என்றும் ஜிதேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் மிரட்டியுள்ளார் நிஜாம்.
இதனால், தாம் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி, அந்தத் தொழிலதிபர் தொடர்ந்து பணம் கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 2024 முதல் 2026ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மொத்தம் 2.77 கோடி ரூபாய் பறிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் மங்களூரில் தொழிலதிபர் ஜிதேஷை நேரில் பார்த்துவிட்டதால் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, ஜிதேஷ், நிஜாம் இருவரும் கைதாகி உள்ளனர்.

