புதுடெல்லி: அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் இவ்வாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.248.6 கோடியைச் செலவிட்டது.
அதே நேரத்தில், தேர்தல் காலத்தில் அக்கட்சிக்கு ரூ.207.1 கோடி வருவாய் கிடைத்தது. தேர்தல் ஆணையத்திடம் ஜூலை 31 அன்று காங்கிரஸ் தாக்கல் செய்த செலவுக் கணக்கு அறிக்கையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தலின் தொடக்கத்தில் ரூ.146.1 கோடியாக இருந்த கட்சியின் வங்கிக் கணக்கு இருப்பு 45 விழுக்காடு குறைந்து ரூ.80.6 கோடியாகச் சரிந்தது. கையிருப்பிலிருந்த ரொக்கப் பணம் ரூ.22.6 கோடியாகக் குறைந்தது.
பொதுப் பிரசாரத்திற்காக ரூ.143 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.105.6 கோடியும் செலவிடப்பட்டது. அச்சு, மின்னணு ஊடகங்கள், குறுஞ்செய்தி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தள விளம்பரங்களுக்கு ரூ. 92.5 கோடியும், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு ரூ.8 கோடியும் செலவானது.
சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகளுக்கு ரூ.11.5 கோடியும், சமூக ஊடகப் பிரசாரத்திற்கு ரூ.6.8 கோடியும் செலவிடப்பட்டது. நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைவர்களின் விமானப் பயணக் கட்டணமாக ரூ. 23.5 கோடி செலவிடப்பட்டது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அசாமில் 21 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஆறு தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகளிலும் மட்டுமே காங்கிரஸ் கட்சி அல்லது அது இடம்பெற்ற கூட்டணி வென்றது. தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றது.


