கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு

10 நாள்களாகத் தொடர்ந்த இழுபறிக்கு முடிவு

கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு

2 mins read
649ee352-8622-4e94-962c-bc19825d934b
கேரள மாநிலச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு வி.டி.சதீசனுக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். - படம்: பிடிஐ

திருவனந்தபுரம்: கேரளச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வரைத் தேர்வு செய்வதில் 10 நாள்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

கேரள மாநிலக் காங்கிரசின் துணைத் தலைவராக இருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கேரள முதல்வராகவும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (மே 14) அறிவிக்கப்பட்டது.

அவர் இம்மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

இதனையடுத்து, கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளச் சட்டமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை வென்றது. காங்கிரஸ் 63 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது.

கேரளாவில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த 10 நாள்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.
கேரளாவில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த 10 நாள்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் மே 7ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, கேரளச் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலத்தின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து வி.டி. சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேரள மாநிலக் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி குறிப்பிட்டார்.

புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டதை மனதார வரவேற்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். முதல்வர் போட்டியில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இவருக்கு இருந்தது.

சதீசன், விரைவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அவரது தலைமையில் கேரளத்தில் கூட்டணி ஆட்சி அமையும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. கேரளாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்