புதுடெல்லி: இந்தியாவில் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அவைகளின் உறுப்பினர்களில் 21 விழுக்காட்டினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 5,204 மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
அவர்களில் 1,107 பேர் அதாவது, ஐந்தில் ஒரு பங்கினர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.
நாடாளுமன்றத்தில்தான் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்களின் விகிதம் அதிகம் என்றும் அது குறிப்பிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 விழுக்காட்டினரும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 20 விழுக்காட்டினரும் அரசியல் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.
தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை அரசியல் பின்புலம் கொண்ட உறுப்பினர்களின் பட்டியலில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பட்டியலில் அடுத்த இரு நிலைகளில் இருக்கின்றன.
மாநிலக் கட்சிகளில் தேசியவாத காங்கிரசும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியில் 42 விழுக்காடு மக்கள் பிரதிநிதிகள் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.
38 விழுக்காடு பிரதிநிதிகளுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் 36 விழுக்காடு பிரதிநிதிகளுடன் தெலுங்கு தேசமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 18% அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகளுடன் திமுக அடுத்த நிலையில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மாநில வாரியாகப் பார்த்தால் அரசியல் குடும்பப் பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் விகிதத்தில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
255 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அம்மாநிலத்தில் 86 பேர் அதாவது, 34 விழுக்காட்டினர் அரசியல் பின்புலம் உடையவர்கள்.
அந்த வரிசையில் 32 விழுக்காட்டுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் 29 விழுக்காட்டுடன் கர்நாடகா மூன்றாவது இடத்திலும் 27 விழுக்காட்டுடன் பீகார் நான்காவது இடத்திலும் 23 விழுக்காட்டுடன் உத்தரப் பிரதேசம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 539 பெண் பிரதிநிதிகளில் 47 விழுக்காட்டினரும் 4,665 ஆண் பிரதிநிதிகளில் 18 விழுக்காட்டினரும் அரசியல் குடும்பப் பின்புலம் கொண்டவர்கள்.
குடும்ப அரசியலின் ஆதிக்கம், அதிக தேர்தல் செலவுகள், கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லாதது போன்ற காரணிகளே வேட்பாளர் தேர்வில் அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கம் தலைதூக்கக் காரணமாக உள்ளதாக அந்த ஆய்வை நடத்திய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கூறியது.