புதுடெல்லி: இந்தியாவில் நடந்து முடிந்துள்ள இரு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில், நாட்டை ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவும் ஏற்படும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்து உள்ளன.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
அதேபோல, ஹரியானாவிலும் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு சனிக்கிழமை (அக்டோபர் 5) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் காஷ்மீர், ஹரியானாவில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரிலும் ஹரியானாவிலும், வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினமே எல்லா முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, சனிக்கிழமை ஹரியானா வாக்குப்பதிவு நிறைவுபெற்ற சிறிது நேரத்தில் பல்வேறு ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காஷ்மீரில் அந்தக் கூட்டணிக்கு 40 முதல் 48 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு 27 முதல் 32 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இண்டியா டுடே - சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதர ஊடகங்களும் இதனை ஒட்டியே கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஹரியானாவில், ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 55 முதல் 62 இடங்கள், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்கள், இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பத்து ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவுக்கு இம்முறை அங்கு ஏமாற்றம் ஏற்படும் என்பதை கணிப்புகள் உணர்த்துகின்றன.