தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ் தொண்டரின் உடல் பெட்டியில் கண்டுபிடிப்பு

2 mins read
f23350e8-f20a-4611-9385-1610988c6732
ஹிமானி நர்வாலின் (இடது) உடல் பெட்டியில் இருந்தது. - படங்கள்: newsx.com / இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 வயது தொண்டரின் உடல் ஒரு பெரிய பெட்டிக்குள் இருந்தது தெரிய வந்துள்ளது.

ஹிமானி நர்வால் எனும் அந்த 23 வயது பெண்ணின் உடல் பெரிய நீல நிறப் பெட்டியில் இருந்தது. அப்பெட்டி, ரோத்தாக்-டெல்லி விரைவுச்சாலையில் உள்ள சம்பிலா பேருந்து நிறுத்தத்துக்கு அருகே காணப்பட்டது.

டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் தினத்தில் காங்கிரஸ் தொண்டரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் அரசியல் ரீதியான பூசல் எழுந்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாண்டவர், ரோத்தாக் நகரில் உள்ள தங்கள் கட்சியின் இளையர் அணியில் பொறுப்பு வகித்துவந்த ஹிமானி நர்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்தது. ரோத்தாக், காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் ஹரியானா முதலமைச்சருமான புப்பிந்தர் சிங் ஹூடாவுக்கு அதிக ஆதரவு இருக்கும் பகுதியாகும்.

“காங்கிரசுக்குச் சேவையாற்றிவந்த ஹிமானி நர்வால் ரோத்தாக்கில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் தருகிறது,” என்று திரு ஹூடா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“இது, இம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலைமையை நன்கு எடுத்துக் காட்டுகிறது,” என்றும் அவர் பதிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) மாண்ட பெண்ணின் உடல் இருந்த பெட்டி சம்பிலா பேருந்து நிறுத்தத்துக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சம்பிலா காவல் நிலையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

சோனிபெட் நகரைச் சேர்ந்த ஹிமானி நர்வால், சோனிபெட்டில் உள்ள கத்துரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்று இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது. அவர், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ரோத்தாக் நாடாளுமன்ற உறுப்பினர் திப்பேந்தர் ஹூடா ஈடுபட்ட நிகழ்ச்சிகளும் அந்நடவடிக்கைகளில் அடங்கும்.

நர்வால், காங்கிரஸ் கட்சியின் இளையர் அணி துணைத் தலைவர் என்று அவரின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியுடன் நர்வால், பாத யாத்திரையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்