புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒன்பது பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் ஒன்பது பேரும் டெல்லி, மும்பை உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (மே 30) தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி, மும்பை, பஞ்சாப் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் சிலர் வெளிநாட்டினர் என்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தெரிவித்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான தோட்டாக்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
நாடு முழுவதும் பரவலாக அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய இடங்கள் மீதும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.
மேலும், அணுசக்தி நிலையங்கள், விமான, ரயில், பேருந்து நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றையும் அவர்கள் குறிவைத்திருந்த அதிர்ச்சித் தகவலும் தெரியவந்தது.
இந்தப் பயங்கரவாதக் குழுவுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் உள்ள தொடர்பு குறித்து இந்தியத் தரப்புக்கு முன்பே தகவல் தெரியவந்ததையடுத்து, அக்குழுவினர் சில காலமாகக் கண்காணிப்பில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இக்குழுவின் எல்லை தாண்டிய தொடர்புகள், நிதி ஆதாரங்கள், செயல்பாடுகளை வழிநடத்துவதில் வெளிநாட்டு முகவர்களின் பங்கு ஆகியவை குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையை அடுத்து, தலைநகர் புதுடெல்லி, தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கிடைத்த உளவுத்தகவல்களை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் சாத்தியமுள்ளதாகக் கருதப்படுவதால் மத்திய டெல்லி பகுதியில் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அங்கு, வாகனத் தணிக்கை நடத்தப்படுவதுடன் தனியாக, கவனிக்கப்படாத வாகனங்களும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


