மும்பை: மும்பை முஹர்ரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்லத் திட்டமிட்டதாக உயிர்க்கொல்லி மாத்திரைகளுடன் கைதான நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரே ரோடு பகுதியில் உள்ள ரஹ்மதாபாத் மயானத்துக்கு அருகில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒருவர் மாத்திரையை விநியோகித்துள்ளார். குறிப்பாக, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அந்த மாத்திரைகளை வலி நிவாரணி, நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் என்று கூறி கொடுத்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த ஒரு பெண் காவல் அதிகாரி புகார் செய்ததால் அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மாத்திரைகளை விநியோகித்த பயாஸ் பிரேம்ஜி என்பவரைக் கைது செய்தனர்.
அவரைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, அந்த மாத்திரைகளை உட்கொண்ட 11 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது, அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளனர்.
அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசிய மும்பை மாநகரக் காவல் துணை ஆணையர் ஜெயந்த் மீனா, “புகாரையடுத்து மாத்திரைகளை விநியோகித்த பயாசைக் காவல்துறை கைது செய்தனர். அவரிடமிருந்து 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மாத்திரைகளில் எலியைக் கொல்லும் நச்சு, பிற பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் ‘ஸின்க் பாஸ்பைட்’ என்ற ஆபத்தான வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது,” என்றார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதே தனது நோக்கம் என்று விசாரணையின்போது பயாஸ் ஒப்புக்கொண்டார்.
பிபிஏ பட்டதாரியான அந்த நபர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
அவர்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

