புதுடெல்லி: தொகுதி வரையறை மசோதா, கூட்டாட்சி கட்டமைப்பைக் குலைப்பதற்கும் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட மத்திய பாஜக அரசின் சதி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அரசின் சதி தோற்கடிக்கப்பட்டது அரசியல் அமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எப்படியாவது ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை நான் சதியாகப் பார்க்கிறேன். அதற்காக பெண்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள்.
“நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நினைத்தனர். இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் மற்ற கட்சிகளை பெண்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி, பெண்களுக்கான பாதுகாவலரைப் போல் தங்களைச் சித்திரிக்க முயன்றனர். இந்தத் தோல்வி அவர்களுக்கான கறுப்பு நாளாக அமைந்துவிட்டது,” என்றார் பிரியங்கா.
தற்போது பெண்களுக்கான பிரச்சினைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் அறிவற்றவர்கள் அல்ல என்றும் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே இந்திய அரசு விரும்பினால், கடந்த 2023ஆம் ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனைத்துக் கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் சிறிய திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதை உடனுக்குடன் செய்யலாம் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.

