புதுடெல்லி: தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் எந்த ஒரு மாநிலத்துக்கும் அநீதியோ பாகுபாடோ இருக்காது என்று பிரதமர் மோடி வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இருக்காது என்றும் அவர் இந்திய நாடாளுமன்றத்தில் பேசியபோது குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்திய நாடாளுமன்றத்தில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தொகுதி மறுவரையறை, யூனியன் பிரதேசத் தொகுதிகள் மறுவரையறை ஆகிய மூன்று சட்ட மசோதாக்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாக்களைத் தாக்கல் செய்த பின்னர், அவற்றின் மீது 15 முதல் 18 மணி நேரம் வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மூன்று மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதரவாக மக்களவையில் 251 உறுப்பினர்களும் எதிராக 185 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, மக்களவையில் விவாதம் தொடங்கியது.
தேவைப்பட்டால் இந்த விவாதம் மேலும் நீட்டிக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இண்டியா கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியதும், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கே.சி. வேணுகோபால் தொகுதி வரையறை மசோதாவைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்த பிறகே தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்போது எதற்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள மத்திய அரசு முயல்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மாலை மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, வியாழக்கிழமை பிரதமர் மோடி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குறித்து உரையாற்றினார்.
புதிய மசோதா மூலம் தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இதனால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்றும் உறுதி அளித்தார்.

