போபால்: மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான குடிநீரைக் குடித்த மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
கடந்த மாதம் இந்தூர் நகரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் குடிநீர் மாசுபாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர்.
சிகிச்சை அளித்தும் பலனின்றி 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பாகீரத்புரா பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் கெய்க்வாட் என்பவர் உயிரிழந்துவிட்டார். மாசடைந்த குடிநீரைக் குடித்ததால் அவருக்குக் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதற்காக கடந்த 15 நாள்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அது பலனளிக்காமல் 50 வயதான ஹேமந்த் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்துவந்தார் என்றும் அரசாங்கம் தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் ஹேமந்த் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

