ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

1 mins read
57ffcb44-b191-4299-a47a-f6ff25dce28c
ராகுல் காந்தி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஹதராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்து தொடர்பாக, நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி ரூ.1.5 கோடி அளிக்க வேண்டுமென இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில், கடந்த 2020ஆம் ஆண்டு பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

வட இந்திய மாநிலங்களில் இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நான்கு பேரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, நான்கு பேரில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று கூறி, மூன்று பேரை நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், ஹதராஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் அடைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் தமது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

அவரது இக்கருத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று பேரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதாக அவர்களது வழக்கறிஞர் முன்னா சிங் புந்திர் தெரிவித்துள்ளார்.

“இது தண்டனைக்குரிய குற்றம். எனவே, ரூ.1.5 கோடி கேட்டு ராகுல் காந்தி மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாள்களுக்குள் உரிய பதிலை அவர் அளிக்க வேண்டும்,” என முன்னா சிங் புந்திர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்